Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 197 பாடல் வரிகள்
ஆரும் துணை இல்லையே எனக்
காதியான் திருப்பாலா – உந்தன்
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய் யேசுநாதா.
சீர் உலாவு பூங்காவில் ஓர் கனி
தின்ற பாதகம் மாற்றவே
சிலுவை மீதினிலே உயிர்விடும்
தேவனே என் சுவாமி. – ஆரும்
1. முந்து மானிடர் தந்த தீவினை
முழுவதும் அறவேண்டியே
முள்முடியுடன் குருசில் ஏறிய
முன்னவா கிருபை கூர்வையே
சிந்தும் உன் உதிரத்தில் என் வினை
தீர்த்திரசியும்; ஐயனே
தீயபாவி எனக்கு வேறொரு
செயலிடம் துணை இல்லையே! – ஆரும்
2. தந்தை தாயாரும் மைந்தர் மாதரும்
சகலரும் உதவார்களே
சாகும் நாளதில் நீ அலால் எனைத்
தாங்குவார்களும் உண்டுமோ?
சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு
சொந்தமானவர் இல்லையே
சுற்றமும் பொருள் அத்தமும் முழ
பத்தமே என் தத்தனே!- ஆரும்
3.கள்ளனாயினும் வெள்ளனாயினும்
பிள்ளை நான் உனக்கல்லவோ?
கர்த்தனே வலப்பக்கமேவிய
கள்ளனுக் கருள் செய்தையே
தள்ளி என்னைவிடாமல் உன்னடி
தந்து காத்தருள் அப்பனே
தயவாய் ஒரு குரசில் ஏறிய
சருவ ஜீவ தயா பரா – ஆரும்
4.நன்றி அற்றவனாகிலும் எனைக்
கொன்று போடுவதாகுமோ?
நட்டமே படும் கெட்ட மைந்தனின்
கிட்ட ஓடினதில்லையோ?
கொன்றவர்க் கருள் செய்யும் என்று
பிதாவை நோக்கிய கொற்றவா
குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப்
பெற்றவா பொறுத் தாள்வையே – ஆரும்
5.பக்தியேதும் இலாது மாய
சுகத்தை நாடிய பித்தனாய்ப்
பாழிலே எந்தன் நாள் எல்லாங் கெடுத்
தேழையாகினேன் என் செய்வேன்?
சத்ருவான பிசாசினால் வரும்
தந்திரம் கொடிதல்லவா?
தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன்
தஞ்சல் கூறும் அனாதியே